விஞ்ஞானிகள் வியக்கும் அதீத புலனாற்றல்! (Parapsychelogy is excellent of scientist)




ஐந்து புலன்களால் அறிவியல் பூர்வமாக அறியப்படுவது மட்டுமே மெய் மற்றதெல்லாம் பொய் என்று நவீன அறிவியல் விஞ்ஞானிகள் சென்ற நூற்றாண்டு வரை கருத்துக் கொண்டிருந்தனர். ஆனால் விளக்க முடியாத ஏராளமான சம்பவங்கள் ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. ஆகவே இவற்றை ஆராய The Society for Psychical Research (S.P.R.) என்ற அதீதப் புலானாற்றல் ஆய்வு மையம் லண்டனில் 1882ம் ஆண்டு நிறுவப்பட்டது.
மூடி சிலிடப்பட்ட கவர்களில் இருக்கும் செய்திகளைப் படிப்பது, தொலைதூரத்தில் இருப்பதைப் பார்ப்பது, எண்ணங்கள் மூலம் தொலை தூரத்தில் இருப்பவரைக் கட்டுப்படுத்துவது, அவர்களுக்கு ஆணை இடுவது, மனோசக்தியாலேயே பொருள்களை நகர்த்துவது, ஆவிகளுடன் பேசுவது, முற்பிறப்பு உண்மைகளைச் சொல்வது என்று இப்படி எண்ணில் அடங்கா விந்தைகளை ஆராய ஒரு மையம் ஏற்பட்டவுடன் நூற்றுக் கணக்கான விஞ்ஞானிகள் ஆயிரக்கணக்கான சோதனைகளை நடத்தி வருகின்றனர். அவர்களது சோதனை முடிவுகள் அனைவருக்கும் திகைப்பையும் பிரமிப்பையும் தருவதாக அமைந்துள்ளன!
ஜாகொல்லியட்
எல். ஜாகொல்லியட் (L.jacolliet - 1901) என்பவர் "occult sciences in India" என்ற தனது நூலில் காசியில் தான் சந்தித்த இந்திய யோகியைப் பற்றி விவரிக்கிறார். அந்த யோகி தனது மனோசக்தியால் நீர் நிரம்பியுள்ள மிகவும் கனமான வெங்கலத்தால் ஆன ஜாடியை ஜாகொல்லியட் நகர்த்தச் சொன்ன திசையில் நகர்த்துவாராம்! அது மட்டுமின்றி தரையிலிருந்து 7 முதல் 8 அங்குலம் வரை அதை மேலே எழும்பச் செய்வாராம்!


டெட் செரியோஸ்
டெட் செரியோஸ் என்பவர் மனதில் தோன்றும் சித்திரங்களை அப்படியே போட்டோவில் படைக்கும் வல்லமை பெற்றவர்! இவரை எய்ஸன்புட் என்ற விஞ்ஞானி இடைவிடாது தொடர்ந்து சோதனை செய்தார். அவரது சோதனைச்சாலையிலும் சோதனைகள் தொடர்ந்தன. எதை செரியோஸ் நினைக்கிறாரோ அது போலாரய்ட் காமராவில் கூடப் படமாக விழவே அனைவரும் வியப்படைந்தனர். இவரது திறமையை - "Thoughtography" - எண்ணப்படம் என்று கூறி ஒரு புதிய வார்த்தையையே உருவாக்கினர். டெட் செரியோஸ் பற்றி எய்ஸன்புட் எழுதிய நூலான "தி வோர்ல்ட் ஆட் டெட் செரியோஸ்" (The World of Ted Serious - 1967) மிகவும் புகழ் பெற்றது.
நினா குளாகினா
விஞ்ஞான உலகையே பரபரப்பூட்டியவர் நினா குளாகினா என்ற ரஷியப் பெண்மணி! இவரது கணவர் வி.வி. குளாகின் ஒரு எஞ்சினியர். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இவரை சோதனை செய்தனர் பிரமித்தனர்! ஒரு ப்லெக்ஸிகிளாஸ் கியூபுக்குள் (Plexiglass Cube) வைக்கப்பட்ட பொருளை இவர் மனோசக்தியால் நகர்த்திக் காட்டினார். அது காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருளோ அல்லது ஈர்க்கப்படாததோ, ஆர்கானிக்கோ, இனார்கானிக்கோ எந்த வகைப் பொருளானாலும் இவர் பார்த்தாலே போதும். அது நகர ஆரம்பித்து விடும்! 50 கிராம் எடையுள்ள பொருள்கள் எட்டு அங்குல தூரத்திலிருந்து இவரை நோக்கித் தத்தித் தத்தி வருவதைப் பார்த்த விஞ்ஞானிகள் திகைப்படைந்து அதைப் படம் பிடிக்கவும் செய்தனர்! ஒரு தராசில் 30 கிராம் படிக்கல் வைக்கப்பட்டவுடன் இவர் பார்வை பட்டவுடன் எதிரில் இருக்கும் வெற்றுத் தட்டு 40 கிராம் வைத்தது போலக் கீழே இறங்கும்!
அவரது தலை ஓட்டின் பின் எலும்பில் (Occipital region of the skull) எலக்ட்ரோடுகள் - பொருத்தப்பட்டன. சாதாரணமாக இருப்பதை விட 50 மடங்கு அதிக வலிமை வாய்ந்த மூளை அலைகள் பதிவு செய்யப்பட்டன! இதர இடங்களில் மாட்டப்பட்டிருந்த எலக்ட்ரோட்கள் எந்த வித மாற்றத்தையும் காண்பிக்கவில்லை. கெய்ல் மற்றும் ஹெர்பர்ட் (1974) ஆகிய விஞ்ஞானிகள் இந்த சோதனை முடிவுகளை ஒரு நூலாக எழுதியுள்ளார்கள்.


இப்படிப்பட்ட ஏராளமான சோதனைகள் ஐம்புலன்களுக்கு அப்பால் பல சக்திகள் உள்ளன என்பதை நிரூபித்து விட்டதால் அதீத உளவியல் (Parapsychology) இன்று அங்கீகரிக்கப்பட்ட ஒரு அறிவியல் கிளையாக ஆகி விட்டது.






Source: www.koodal.com